டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 59 ஓட்டங்களால் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 195 ஓட்டங்களால் வெற்றிகொண்டு பங்களாதேஷ் சம்பியனாகியிருந்ததுடன் இந்த வருடம் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான பங்களாதேஷ் இளையோர் அணியை இலங்கையின் நவீத் நவாஸ் பயிற்சி அளித்து வருகின்றார்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் சம்பியனானபோதும் நவீத் நவாஸ் பயிற்றுநராக இருந்ததுடன், இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 49.1பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.
இதன்படி, மொஹம்மத் ஷிஹாப் ஜேம்ஸ் 40 ஓட்டங்களையும், ரிஸான் ஹொசெய்ன் 47 ஓட்டங்களையும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பெற்றனர். இதேவேளை, பரித் ஹசன் 39 ஓட்டங்களையும் ஸவாத் அப்ரார் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் யூதாஜித் குஹா 29 ஓட்டங்களுக்கு 2இலக்குகளையும் ஹார்திக் ராஜ் 41 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் சேத்தன் ஷர்மா 48 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.
199 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 35.2 பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இந்திய துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் மொஹம்மத் அமான் 26 ஓட்டங்களையும், ஹார்திக் ராஜ் 24 ஓட்டங்களையும், கே.பி. கார்த்திகேயா 21 ஓட்டங்களையும், சி. அண்ட்றே சித்தார்த் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அஸிஸுல் ஹக் 8 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளையும் இக்பால் ஹொசெய்ன் 24 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளையும் அல் பஹாத் 34 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் பங்களாதேஷ் பந்துவீச்சாளர் இக்பால் ஹொசெய்ன் பெற்றுக்கொண்டார்.