டேர்பனில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்குள் சகல
இலக்குகளையும் இழந்துள்ளது.
புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கியது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 20.4 பந்துப்பரிமாற்றங்களில் 4இலக்கு இழப்புக்கு 80 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதும் ஆட்டம் பாதிக்கப்பட முதல் நாள் ஆட்டம் மதிய நேர இடைவேளையுடன் நிறைவுக்கு வந்தது.
இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்க தென்னாப்பிரிக்க அணி, 49.4 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இந்த இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா தனது 22 ஆவது டெஸ்ட் அரை சதத்தை பூர்த்தி செய்து 70 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 16 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இலங்கைக்கு எதிராக பவுமா பெற்றுக் கொண்ட மூன்றாவது 50க்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார, அஷித பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 இலக்குகளையும், பிரபாத் ஜெயசூர்ய, விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா 2இலக்குகளையும் வீழ்த்தியிருந்தனர். இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் தென்னாப்பிரிக்க அணி பெற்றுக் கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
இதேவேளை, தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் கடந்த 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் 169 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.