ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் பங்குபற்றவுள்ள இலங்கை கனிஷ்ட அணிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கனிஷ்ட இலங்கை அணிகளில் ஒரே நேரத்தில் மூன்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர்கள் இடம்பிடித்துள்ளமை இதுவே முதல் தடடைவயாகும்.
சில வருடங்களுக்கு முன்னர் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பிடித்திருந்த நிலையில், யாழ். மத்திய கல்லூரியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ரஞ்சித்குமார் நியூட்டன் மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் மலிங்க பாணியிலான வேகப்பந்து வீச்சாளர் மாதுளன் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தனர்.
இதேவேளை, 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் யாழ்ப்பாணம்- பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரரான ஆகாஷ் இடம்பிடித்துள்ளார்.
இந்த மூன்று வீரர்களும் தம்புள்ளை பிராந்திய அணியில் திறமையை வெளிப்படுத்தியதன் மூலமாக இலங்கை கனிஷ்ட அணிகளில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.