தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கே சுருண்ட இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகக் குறைந்த ஓட்டங்களைப் பெற்று மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
டர்மனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (28) தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாபிரிக்க அணியை 191 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த இலங்கை அணியால் முடிந்தது. அணித் தலைவர் டம்பா பவுமா மாத்திரம் 70 ஓட்டங்களைப் பெற்றபோதும் வேறு எந்த வீரரும் 24 ஓட்டங்களை தாண்டவில்லை.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார தலா 3 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு விஷ்வ பெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி வரிசையாக தனது விக்கெட்டுகளை தாரைவார்த்தது. பதினாறு ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இலங்கையின் மத்திய வரிசை வீரர்களும் கைகொடுக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சோபிக்கும் கமிந்து மெண்டிஸ் போராடிப் பெற்ற 13 ஓட்டங்களுமே இலங்கை வீரர்களில் அதிகபட்சமாக இருந்தது. குறிப்பாக தென்னாபிரிக்க இடது கை வேகப்பந்து வீச்சாளர் மக்ரோன் ஜான்சனின் பந்துகளை எதிர்கொள்ள இலங்கை வீரர்கள் சிரப்பட்டனர்.
இதனால் இலங்கை அணி 13.5 ஓவர்களிலேயே 42 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதில் நான்கு வீரர்கள் டக் அவுட் ஆனாதோடு கமிந்து மெண்டிஸ் தவிர லஹிரு குமார (ஆட்டமிழக்காது 10) மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்றார்.
அபாகரமாக பந்துவீசிய ஜான்சன் 6.5 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவரது சிறந்த பந்துவீச்சாகவும் இருந்தது. ஜெரால்ட் கொட்சி 2 விக்கெட்டுகளை பாதம்பார்த்ததோடு ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்நிலையில் நேற்று பகல்போசண இடைவேளைக்குப் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி தேநீர் இடைவேளைக்குப் பின்னர் வரை 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 77 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் 149 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற தென்னாபிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் தனது முன்னிலையை 200 ஓட்டங்களுக்கு மேல் அதிகரித்து இலங்கை அணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.