சீனா (China), பிரித்தானியாவில் (UK) உள்ள நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை கைப்பற்றி உயிரியல் ஆயுதங்களை உருவாக்க திட்டமிட்டு வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் சீன மருத்துவத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், நோயாளிகளின் தரவுகளை பயன்படுத்தி சீனாவால் புதிய வைரஸ் அல்லது நோயை உருவாக்க முடியும் என்ற அச்சம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உயிரியல் நிபுணர்களும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
மருத்துவ உபகரணங்கள்
அண்மைய வருடங்களாக பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் தரவுகளை கண்காணிக்க சீன உபகரணங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பிரித்தானியாவில் செயல்பட்டு வந்த ஒரு சீன நிறுவனம் திடீரென்று ஐரோப்பாவிலும் பிரித்தானியாவிலும் கிளைகளை உருவாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தும் நிலைக்கு வளர்ந்துள்ளது.
சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஆண்டுக்கு 4.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் திரட்டும் இந்த சீன நிறுவனம் தற்போது 50 NHS மருத்துவமனை உட்பட ஐரோப்பா முழுவதும் 600 கல்வி சார்ந்த மருத்துவமனைகளில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதுடன், கண்காணிப்பு, மயக்க மருந்து மற்றும் அல்ட்ராசவுண்ட் கருவிகள் உள்ளிட்ட முக்கியமான உபகரணங்களை விநியோகித்தும் வருகிறது.
தரவு சேகரிப்பு
இந்த நிறுவனத்திற்கு சீனாவின் பிரதமர் Li Qiang சென்றிருந்தமை, அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருவதை, உறுதி செய்திருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
NHS மற்றும் ஐரோப்பிய சுகாதாரத்துறையில் சீன தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு ஒரு திட்டமிட்ட அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பெரிய அளவிலான தரவு சேகரிப்பின் சாத்தியம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு MI5 தலைவர் Ken McCallum சீனா தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதுமாத்திரமின்றி, தரவு பாதுகாப்பு வல்லுநர்கள் தற்போது பிரித்தானிய சுகாதாரத்துறையில் பயன்படுத்தப்படும் வெளிநாட்டு கட்டுப்பாட்டு மருத்துவ சாதனங்களின் ஒழுங்குமுறை ஆய்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், தரவுகளை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, NHS முழுவதும் எங்களிடம் கடுமையான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.