ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட நான்கு நாள் உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் தொடர் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இந்தத் தொடரில் பவன் ரத்நாயக்க, சொனால் தினுஷ, அணித் தலைவர் பசிந்து சூரியபண்டார, அஹான் சச்சின்த விக்ரமசிங்க ஆகியோர் துடுப்பாட்டத்திலும் வனுஜ சஹான் சகலதுறைகளிலும் விஷ்வா பெர்னாண்டோ, இசித்த விஜேசுந்தர ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்தனர்.
குறிப்பாக வியாழக்கிழமை வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டியில் பவன் ரத்நாயக்கவும் சொனால் தினுஷவும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் சதங்கள் குவித்து அசத்தினர்.
332 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடிய பவன் 8 பவுண்டறிகள் அடங்கலாக 100 ஓட்டங்களுடனும் சொனால் தினுஷ 290 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 10 பவுண்டறிகள் உட்பட 116 ஒட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில 214 ஓட்டங்களைப் பகிர்ந்து அசத்தினர்.
முதல் இன்னிங்ஸிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சொனால் தினுஷ ஆட்டம் இழக்காமல் 85 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் பின்வரிசையில் வனுஜ சஹான் (63), இசித்த விஜேசுந்தர (51) ஆகியோரும் அரைச் சதங்கள் பெற்றனர். பந்துவீச்சிலும் வனுஜ சஹான் திறமையாக செயல்பட்டு 5 விக்கெட் குவிலைப் பதிவுசெய்தார்.
முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை ஏ அணி பிரகாசிக்கத் தவறியபோதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் அஹான் விக்ரமசிங்க (53), பசிந்து சூரியபண்டார (64), பவன் ரத்நாயக்க (60), சொனால் தினுஷ (62), வனுஜ சஹான் (73) ஆகியோர் அரைச் சதங்களைப் பெற்று அணியை மீட்டெடுத்தனர்.
இந்தத் தொடரில் சொனால் தினுஷ மொத்தமாக 293 ஓட்டங்களைப் பெற்று இரண்டு அணிகளிலும் அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பெற்ற வீரரானார். அவரை விட இலங்கை ஏ அணியில் பவன் ரத்நாயக்க 195 ஓட்டங்களையும் வனிந்து சஹான் 142 ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டார 105 ஓட்டங்களையும் அஹான் விக்ரமசிங்க 100 ஓட்டங்களையும் மொத்தமாக பெற்றனர்.
பந்தவீச்சில் வனுஜ சஹான் மொத்தமாக 7 விக்கெட்களையம் விஷ்வா பெர்னாண்டோ, இசித்த விஜேசுந்தர ஆகியோர் தலா 5 விக்கெட்களையும் மொத்தமாக கைப்பற்றினர்.
இந்த வீரர்களில் விஷ்வா பெரனாண்டோ ஏற்கனவே தேசிய அணியில் இடம்பெற்றுள்ளதுடன் மற்றைய வீரர்கள் வெகுவிரைவில் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி முடிவுகள் (சுருக்கம்)
1ஆவது உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட்
இலங்கை ஏ அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 115, 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 364
பாகிஸ்தான் ஏ அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 280, 2ஆவது இன்: 222 – 3 விக். (போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு)
1ஆவது உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட்
இலங்கை ஏ அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 310, 2ஆவது இன்: 260 – 4 விக். டிக்ளயார்ட்
பாகிஸ்தான் ஏ அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 287, 2ஆவது இன்: 156 – 3 விக். (போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு)