தென் கொரியா கடுமையான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டடுள்ளது. இதனால் அந்நாட்டில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டுகூட வெளியே வராமல் சிக்கி தவித்து வருகின்றனர். விமான சேவையுடன், போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடும் குளிர் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில், 1907-ல் இருந்து, அதாவது கிட்டத்தட்ட 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகரான சியோலில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது இது மூன்றாவது முறை என்று கூறப்படுகிறது. சியோலின் சில பகுதிகளில் 40 செமீ அளவுக்கும் அதிகமான பனி பொழிந்துள்ளது. இதனால் 140-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
காங்வோன் மாகாணத்தின் மத்திய நகரமான வோன்ஜூவில் உள்ள நெடுஞ்சாலையில் 53 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதின. இதனிடையே 11 பேர் காயமடைந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. சியோலின் முக்கிய விமான நிலையமான இஞ்சியோன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சராசரியாக இரண்டு மணிநேரம் தாமதமாக செல்ல வேண்டியாக இருந்தது.
மதியத்திற்குள், கியோங்கி மாகாணத்தில் மழலையர் பள்ளி உட்பட சுமார் 1,285 பள்ளிகள் மூடப்பட்டன. அண்டை நாடான வடகொரியாவில் சில பகுதிகளில் 10 செமீ அளவுக்கும் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.