ஒன்பதாவது சம்பியன்ஸ் கிண்ணம் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 19ம் திகதி முதல் மார்ச் 9ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரைஇறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டது.
ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகியுள்ளது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது யோசனையை தெரிவிப்பார்கள்.
ஐ.சி.சி.யை பொறுத்தவரை இந்திய அணிக்குரிய ஆட்டங்களை மட்டும் வேறு நாட்டில் நடத்துவதற்கு சம்மதிக்கும்படி பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று தெரிகிறது. 10 ஆட்டங்களை பாகிஸ்தானிலும், 5 ஆட்டங்களை வேறு நாட்டிலும் நடத்தலாம் என்ற பரிந்துரையை ஐ.சி.சி. முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டால் சிக்கல் தீரும். ஆனால் அவர்கள் எதுக்கும் பிடிகொடுக்காவிட்டால், போட்டி முழுமையாக வேறு நாட்டிற்கு மாற்றப்படலாம் அல்லது தள்ளிவைக்கப்படலாம்.
பாகிஸ்தானில் அரசியல் போராட்டத்தில் வெடித்த வன்முறை எதிரொலியாக, இலங்கை ‘ஏ’ அணி அங்கு மேலும் 2 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் பாதியிலேயே தொடரை ரத்து செய்து விட்டு தாயகம் திரும்பியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று கூறுகையில், “.. இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு நாட்டிற்கு மாற்றும் திட்டத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதை ஐ.சி.சி.யிடம் சில மணி நேரத்திற்கு முன்பாக தெரிவித்து விட்டோம்.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாவிட்டால் அதன் பிறகு வருங்காலங்களில் இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி. தொடர்களுக்கு நாங்களும் அங்கு செல்லமாட்டோம். அதற்கு பதிலாக பாகிஸ்தான் அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்கவேண்டிய சூழல் வரும். ஐ.சி.சி. விதிப்படி, தங்கள் நாட்டு அரசாங்கம் குறிப்பிட்ட நாட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்று எந்த அணி கூறினாலும், என்ன காரணம் என்றாலும் சரி அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வமான உத்தரவை சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அத்தகைய உத்தரவை இதுவரை நாங்கள் பார்க்கவில்லை..” என்றார்.