தோஹா, அல் கோஹ்ர் விளையாட்டுக் கழக அரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு நடைபெற்ற யேமனுக்கு எதிரான இரண்டாவது சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் 0 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 1 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்ற இலங்கை, நேற்றைய போட்டியில் மத்திய களம் மற்றும் பின்களத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக 2 கோல்களைக் கொடுத்து தோல்வி அடைந்தது.
இரண்டு அணிகளும் மிக வேகமாக விளையாடிய அப் போட்டியின் 17ஆவது நிமிடத்தில் யேமென் போட்ட கோல், ஒவ் சைட் நிலையிலிருந்து பெறப்பட்டதாக மத்தியஸ்தர் தீர்மானித்து அதனை நிராகரித்தார்.
ஆனால், 4 நிமிடங்கள் கழித்து மத்திய கள வீரர் ஆதவன் ராஜமோகனின் தவறான பந்து பரிமாற்றம் காரணமாக யேமென் முதலாவது கோலைப் போட்டது.
ஆதவன் பரிமாறிய பந்தை யேமென் வீரர் ஒருவர் பெற்று அதனை இடப்புறமாக மொஹமத் ஹஷீம் அல் நஜாருக்கு பரிமாறினார்.
அவர் பந்தை நகர்த்திச் சென்று கோலை நோக்கி தாழ்வாக பரிமாற, ஹம்ஸா மஹ்றூவ் மிகவும் இலாவகமாக பந்தை கோலினுள் புகுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கோல் நிலையை சமப்படுத்த இலங்கை அணியினர் கடுமையாக முயற்சித்தனர்.
போட்டியின் 36ஆவது நிமிடத்தில் இலங்கை அணிக்கு பெனல்டி ஒன்று கிடைத்தது.
ஆனால் அந்த பெனல்டியை ஜெக் டேவிட் ஹங்கர்ட் தவறவிட்டார். அவர் இடது புறமாக பந்தை உதைக்க, பந்து கோல் கம்பத்தில் பட்டு முன்னோக்கிச் சென்றது.
இடைவெளையின் போது யேமென் 1 – 0 என முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் கோல் போடுவதற்கு கிடைத்த சில வாய்ப்புகளை இலங்கை தவறவிட்டது.
இதனிடையே சுஜான் பெரேரா மிகவும் திறமையாக செயற்பட்டு இரண்டு கோல் போடும் வாய்ப்புகளைத் தடுத்து நிறுத்தினார்.
போட்டி முடிவடைய சில செக்கன்கள் இருந்தபோது உபாதையீடு நேரத்தில் (90+5 நி.) மாற்று வீரர்கள் மூவரின் பந்து பரிமாற்றங்களுடன் யேமென் இரண்டாவது கோலைப் போட்டது.
ஜமி அல் ஷராபி – அலி நாசர் ஹசன் – ஹம்ஸா யஹியா அல் சுராபி ஆகிய மூவருக்கு இடையில் பரிமாறப்பட்ட பந்தை இறுதியில் அல் சுராபி கோலாக்கினார்.
சற்று நேரத்தில் ஆட்டம் முடிவுக்கு வர யேமென் 2 – 0 என வெற்றிபெற்று முதலாவது போட்டியில் அடைந்த தோல்வியை நிவர்த்திசெய்துகொண்டது.
லியோன் பெரேரா, குளோடியோ ஆகிய இருவரும் உபாதை காரணமாக இந்தப் போட்டியில் விளையாடாதது இலங்கை அணிக்கு பாதகமாக அமைந்தது.