துபாயில் கைதான பின் நாடு கடத்தப்பட்ட சந்தேகநபர்; ஈரான் தாக்குதல் தொடர்பான படங்கள் காரணமாக விசாரிக்கப்பட்டதாகத் தகவல்
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தெஹிவளையைச் சேர்ந்த ஷிரான் பஸிக் என்பவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க மத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CCID) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துபாயில் கைது செய்யப்பட்டிருந்த ஷிரான் பஸிக், ஆகஸ்ட் 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர் CCID அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
துபாயில் என்ன நடந்தது?
ஈரானுடனான பதற்றநிலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், துபாயில் உள்ள ஒரு சொகுசு வர்த்தக வளாகத்தில் இருந்தபோது தம்மை துபாய் காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்ததாக பஸிக் விசாரணையாளர்களிடம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கைபேசியை பரிசோதித்த துபாய் காவல்துறையினர், ஈரானியத் தாக்குதல்கள் தொடர்பான படங்கள் அதில் இருந்ததைக் கண்டறிந்ததாகவும், இதைத் தொடர்ந்தே தம்மைக் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக, ஈரானுடன் தமக்கு எந்தவிதமான தொடர்பும் உள்ளதா என வினவி, இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரையிலான காலப்பகுதியில் துபாய் காவல்துறையினர் தினசரி விசாரணை நடத்தியதாகவும் பஸிக் தெரிவித்துள்ளார்.















