ஒட்டுமொத்த சுகாதார அமைப்பிலும், அவ்வப்போது ஏற்படும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக சர்வதேச நிறுவன வழிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்..
சுகாதாரத் துறையில் நிறுவன தொடர்புகள் இல்லாத காரணத்தினால் மருந்து விநியோக நடைமுறை தாமதமடைந்துள்ளது. மருந்து விநியோக நடைமுறையுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் காணப்பட்டாலும், அவற்றி;ற்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் காணப்பட்ட தொடர்பு மிகவும் குறைவாகக் காணப்படுவதாக கண்காணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கைக்கு தேவையான அத்தியாவசியமான மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த மருந்துவகை உயர்தரத்துடன், தொடர்ச்சியாக விநியோகிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும், மருந்து வகைகள் உரிய நேரத்திலும், பொதுமக்களுக்கு ஏற்ற விலையிலும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கமும் மருந்து விநியோக நிறுவனங்களும் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் ஆரம்பத்திலிருந்தே முறையான ஒருங்கிணைப்பு இன்றி செயற்திறனற்ற நிலையில் இருப்பதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தொடர்ச்சியாகவும் வினைத்திறனாகவும் மருந்துகள் வழங்கப்படுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
உரிய தரத்துடன் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்த பிரதி அமைச்சர், தற்போது இலங்கையில் தேவையான மருந்துகளை உள்நாட்டிலேயே பெருமளவில் உற்பத்தி செய்வதில் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.