நிர்வாக காரணங்களால் சென்னை விமான நிலையத்தில் இருந்து 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையில், நிர்வாக காரணங்களால் இன்று ஒரே நாளில் ஏர் இந்திய நிறுவனத்தை சேர்ந்த 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
சென்னையில் இயங்கி வரும் சர்வதேச விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு என தினமும் பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ஒரு திடீரென ஏற்படும் இயந்திர கோளாறு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம். இந்த நிகழ்வு அவ்வப்போது நடந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக விமான பயணத்தில் திடீர் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்சி மற்றும் மதுரை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில், 12 ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இருந்து, புவனேஷ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி புறப்படும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மற்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் 6 விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 விமானங்களும் ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த விமானங்கள் என்றும் நிர்வாக காரணங்கள், காரணமாக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், சமீப காலமாக விமான சேவை அடிக்கடி ரத்து செய்யப்படுவது, பயணிகளுக்கு பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.