பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்கள் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்கள் இடையே தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த மோதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த 40 பேர் மீது திடீரென மறைந்திருந்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்கள் கழிந்து அதே மாவட்டத்தின் பகன் கிராம பகுதியில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்திருந்தது.
இதில் 21 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அந்தப் பகுதிகளுக்கு அதிகாரிகள் சென்று சமரசத்திற்கான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். எனினும், மீண்டும் மோதல் வெடித்தது.
கோஜாகரி, மதசாநகர் மற்றும் குஞ்ச் அலிஜாய் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் மூன்று பேர் உயிரிழந்து உள்ளந்துள்ளதுடன், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால், வன்முறை சம்பவத்திற்கு மொத்த பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.