சந்தையில் காணப்படும் அரிசியின் நிலைமை குறித்து குறுகிய காலத் தீர்வாக நாட்டரிசி 70,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிபத் துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (20) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அவ்வாறு இந்த அரிசி இறக்குமதிக்கு இலங்கை சதொச மற்றும் இலங்கை அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், இறக்குமதி செய்யப்படும் அரிசியை 220 ரூபா விற்கு அல்லது அதனை விட குறைந்த விலையில் மாத்திரம் விற்பதற்கு இவ் அனுமதி அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
நாட்டில் நாட்டரசி நுகர்வு 65% ஆகக் காணப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் மாதத்திற்கு இவ்வரிசி 140,000 இலட்சம் மெற்றிக் தொன் அவசியமாவதுடன் பொதுவாக ஏனைய அரிசிகள் 2 லட்சம் மெற்றிக் தொன் வரை தேவைப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
அதன்படி 2023/2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இரண்டு போகங்களிலும் 3.1 மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை மற்றும் 2.1 மெற்றிக் தொன்நாட்டரிசி அறுவடை கிடைக்கப்பெற்றதுடன், நுகர்வின்போது அந்தத் தரவுக்கு இணங்க சுமார் நான்கு இலட்சம் மெற்றிக் தொன் மேலதிகமாக காணப்பட வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறைவின்றி நாட்டரசி சந்தைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.