சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகர சபை விளையாட்டு மைதானத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
வடக்கு மக்களுக்குச் சொந்தமான காணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருக்கின்றது. அந்தக் காணிகள் அனைத்தையும் மீண்டும் மக்களுக்கு நாங்கள் வழங்குவோம்.
எமக்குத் தெரியும். இங்கு போர் ஒன்று நடந்தது. பல்வேறு அநீதிகளுக்கு முகங்கொடுத்தோம். இன்று அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களைச் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விரைவில் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதியளிக்கின்றேன்.
இது சமத்துவமான ஒற்றுமையான ஆட்சி. இதைத் தென்பகுதி எதிர்க்காது. ஆனால் அன்று அப்படியல்ல, வடக்கில் ஒன்று நடந்தால் தெற்கு அதற்கு எதிராக இருந்தது. எங்களைப் பிரித்து அரசியல் செய்தார்கள். நாங்கள் இன்று அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.
வடக்கின் மீன்வளத்தைப் பெரியளவில் வேறு நாடுகள் சூறையாடுகின்றன. எமது மீன்வளம் முற்றாக அழியும் வகையில் இதைச் செய்கின்றனர். நாங்கள் அரசு என்ற வகையில் எமது மீனவர்களின் உரிமைக்காக, வடக்கில் வாழும் மீனவர்களின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
சூரியஒளி இன்று மதிப்பு வாய்ந்துள்ளது. அது எமது சக்தி. அதைத் துண்டுதுண்டாக விற்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நாங்கள் மீளாய்வு செய்யவேண்டும். இந்த வளங்களை நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துக்காகவும் பயன்படுத்தவேண்டும்.
கேரளக் கஞ்சா உட்பட போதைப்பொருள் பிரச்சினை இங்கு இருக்கிறது. அதைத் தடுக்கவேண்டும். புதிய ஒரு நிலைக்கு இந்த நாட்டை அழைத்துச் செல்லவேண்டும். எமது முதலாவது வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நிச்சயம் வழங்கப்படும் – என்றார்